அமெரிக்க எழுத்தாளர் ஜோடி பிக்கோவின் ‘The Story Teller’ என்ற நாவலில் மின்கா என்கின்ற ஒரு மூதாட்டியின் பாத்திரம் வருகிறது. மின்காவும் அவள் நண்பியான தரீஜாவும் தம்முடைய பதின்மங்களில் ஓஸ்விச் வதை முகாமில் நாசிக்களினால் அடைக்கப்படுகிறார்கள். முகாம் வாழ்க்கையில் மின்கா கதைகளை எழுத ஆரம்பிக்கிறாள். அக்கதைகள் அவளுக்கு மாத்திரமின்றி அந்த முகாமில் சிறைபிடிக்கப்பட்டிருந்த பலருக்குமே வடிகாலாக அமைந்துபோயின. ஆரம்பத்தில் அவள் கதைகளில் ஈர்க்கப்பட்ட ஒரு நாசிக் காவலன் மின்காவுக்கு போர்வையும் உணவும் கொடுக்க ஆரம்பிக்கிறான். ஆனால் ஈற்றில் அந்தத் தொடர்பே மின்காவின் நண்பி தரீஜாவின் மரணத்துக்கும் காரணமாகிவிடுகிறது. மின்காவும் கொலைக்களத்துக்கு அனுப்பப்பட்டாலும் இறுதிக்கணத்தில் எப்படியோ தப்பியோடி ஒரு வழியாக அமெரிக்காவைச் சென்றடைகிறாள்.
இந்த வருடத்தின் முதல் வாசகர் வட்டம் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 31ஆம் தேதி நடந்தது. ஜெயமோகன் அவர்களின் “சங்கச் சித்திரங்கள்”தான் கலந்துரையாடலுக்கான புத்தகம்.
"நமக்குத் தொழில் கவிதை" என்று சொன்ன பாரதியை பிடிக்கும் என்றாலும் கவிதைகளை இப்பொழுதுதான் எழுத்துக்கூட்டி படிக்கும் நிலையில் இருப்பவள். இதில் சங்க இலக்கிய கவிதைகள் பேசுபொருள்.
“கரை இரண்டானாலும் கடல் ஒன்றுதானே”
“வீட்டில் இருந்து வயலுக்கு கொண்டு செல்லும் விதை ஓர் எதிர்பார்ப்பு. வீட்டுக்கு கொண்டு வரும் மலர் ஒரு நம்பிக்கை. இவை இரண்டுக்கும் நடுவே இரவுகளும் பகல்களுமாக காலமும் வாழ்க்கையும்” போன்ற ஜெயமோகனின் வரிகளில் மனம் தொக்கி நின்றாலும் மெல்ல மெல்ல கவிதையின்பால் திரும்பியது.
“கல்பொரு சிறு நுரை” எனும் குறுந்தொகைப் பாடலை பற்றிய கட்டுரையை வாசிக்கும் பொழுது நமக்கு இப்படி ஒரு நல்ல தமிழ் ஆசிரியர் அமையவில்லையே என்ற வருத்தம் மேலோங்கியது. சங்க இலக்கிய கவிதைகளுக்கு எளிதான ஓர் அறிமுகம். ஆனந்த விகடனில் தொடராக வந்தது. (சுஜாதாவின் 401 காதல் கவிதைகளை நான் வாசித்ததில்லை.)
சங்க இலக்கிய கவிதைகளை வாசித்தபொழுது தனக்கு ஏற்பட்ட உன்மத்தமான நிலையை ஜேகே விவரித்தபோதே மீண்டும் அவர் முகத்தில் பரவசமும் உன்மத்தமும் குடிகொண்டது.
கவிஞர்கள் குழந்தையின் மன நிலையில் இருப்பவர்கள் என்று அசோக் தன் 6 அல்லது 7 வயது மகனுடனான உரையாடலை சொல்லிய சம்பவம் நெகிழ வைத்தது.
"செவ்விலக்கியம் கோயில் சிலை போல. முதலில் அது கல். அதற்கு பிறகு அழகிய சிற்பம். பிறகு பிரபஞ்சசாரமான கடவுள். முதல் வாசிப்பில் பொதுவாக அது நம்மை சுவாரசிய படுத்துவது இல்லை. வாசித்ததுமே நம்மை ஆட்கொள்ளும் படைப்பில் செவ்வியல் அம்சம் குறைவு என்றே கொள்ள வேண்டும், ஏனெனில் செவ்விலக்கியம் தன் முழுமையான சமநிலையிலேயே எப்போதும் காணப்படுகிறது. அது ஓசையிடுவதில்லை. காரணம் அதன் மொழி மௌனமே. மண்ணில் ஒரு விதையை அது ஊன்றுகிறது. மழை நம்முடையது. மறுநாள் பெய்யலாம், முப்பது வருடம் கழித்தும் பெய்யலாம்_ஜெயமோகன்.
எனக்கு இப்பொழுதுதான் விதை கிடைத்துள்ளது.
தோழி கலா சொல்லியதுபோல் மழை குளிர குளிர பெய்ய முதலில் நிலம் அதற்கு பண்பட்டு ஏங்கி நிற்க வேண்டும்.
-- சாந்தி சிவகுமார்
கருத்துகள்
கருத்துரையிடுக