முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நதியின் "காத்திருப்பு"

அமெரிக்க எழுத்தாளர் ஜோடி பிக்கோவின் ‘The Story Teller’ என்ற நாவலில் மின்கா என்கின்ற ஒரு மூதாட்டியின் பாத்திரம் வருகிறது. மின்காவும் அவள் நண்பியான தரீஜாவும் தம்முடைய பதின்மங்களில் ஓஸ்விச் வதை முகாமில் நாசிக்களினால் அடைக்கப்படுகிறார்கள். முகாம் வாழ்க்கையில் மின்கா கதைகளை எழுத ஆரம்பிக்கிறாள். அக்கதைகள் அவளுக்கு மாத்திரமின்றி அந்த முகாமில் சிறைபிடிக்கப்பட்டிருந்த பலருக்குமே வடிகாலாக அமைந்துபோயின. ஆரம்பத்தில் அவள் கதைகளில் ஈர்க்கப்பட்ட ஒரு நாசிக் காவலன் மின்காவுக்கு போர்வையும் உணவும் கொடுக்க ஆரம்பிக்கிறான். ஆனால் ஈற்றில் அந்தத் தொடர்பே மின்காவின் நண்பி தரீஜாவின் மரணத்துக்கும் காரணமாகிவிடுகிறது. மின்காவும் கொலைக்களத்துக்கு அனுப்பப்பட்டாலும் இறுதிக்கணத்தில் எப்படியோ தப்பியோடி ஒரு வழியாக அமெரிக்காவைச் சென்றடைகிறாள்.

தமிழ்நதியின் "காத்திருப்பு"



அமெரிக்க எழுத்தாளர் ஜோடி பிக்கோவின் ‘The Story Teller’ என்ற நாவலில் மின்கா என்கின்ற ஒரு மூதாட்டியின் பாத்திரம் வருகிறது. மின்காவும் அவள் நண்பியான தரீஜாவும் தம்முடைய பதின்மங்களில் ஓஸ்விச் வதை முகாமில் நாசிக்களினால் அடைக்கப்படுகிறார்கள். முகாம் வாழ்க்கையில் மின்கா கதைகளை எழுத ஆரம்பிக்கிறாள். அக்கதைகள் அவளுக்கு மாத்திரமின்றி அந்த முகாமில் சிறைபிடிக்கப்பட்டிருந்த பலருக்குமே வடிகாலாக அமைந்துபோயின. ஆரம்பத்தில் அவள் கதைகளில் ஈர்க்கப்பட்ட ஒரு நாசிக் காவலன் மின்காவுக்கு போர்வையும் உணவும் கொடுக்க ஆரம்பிக்கிறான். ஆனால் ஈற்றில் அந்தத் தொடர்பே மின்காவின் நண்பி தரீஜாவின் மரணத்துக்கும் காரணமாகிவிடுகிறது. மின்காவும் கொலைக்களத்துக்கு அனுப்பப்பட்டாலும் இறுதிக்கணத்தில் எப்படியோ தப்பியோடி ஒரு வழியாக அமெரிக்காவைச் சென்றடைகிறாள்.

அமெரிக்காவில் பல தசாப்தங்களாக வாழுகின்ற மின்கா தன் கதைகளை பின்னர் எழுதவே தலைப்படவில்லை. ஈற்றில் வயோதிபத்தின் எல்லையில் அவரது பேத்தியின் தூண்டுதலிலேயே அவர் மனம் திறக்க நேரிடுகிறது. தேர்ந்த கதைசொல்லியான நீங்கள் உங்களுடைய அனுபவங்களையும் கதைகளையும் ஏன் யாருடனும் பகிர்ந்துகொள்ளவேயில்லை என்று பேத்தி மின்காவிடம் வினவுகிறாள். வதை முகாமின் கொடுமையான வாழ்வைக்கூடக் கதைகளை எழுதுவதன்மூலம் கழிக்கத் தெரிந்தவர், ஏன் பின்னர் அதைத் தொடரவில்லை என்ற கேள்வி பேத்திக்கு மட்டுமின்றி எங்களுக்குமே ஏற்படுகிறது.

அதற்கு மின்கா சொல்லும் பதில் ஆழமானது.

ஒரு எழுத்தாளர் தன் வசம் வைத்திருக்கும் ஆயுதங்கள் அத்தனையுமே பழுதானவை. பல வார்த்தைகள் அவற்றின் வடிவத்தையே இழந்துவிட்டன. பல தேவைக்கு அதிகமாகவே பயன்படுத்தப்பட்டுவிட்டன. உதாரணத்துக்கு ‘அன்பு’ என்ற வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள். நான் அன்பு என்று வார்த்தையை ஆயிரம் தடவைகள் எழுத முடியும். அவை ஆயிரக்கணக்கில் வேறு வேறு அர்த்தங்களை வேறு வேறு வாசகர்களுக்குக் கொடுக்கக்கூடும்.

இதில் என்ன பயன் வந்துவிடமுடியும்? என் உணர்வுகள் சிக்கலானவை. கட்டற்றவை. அதீதமானவை. அவற்றை வெறுமனே ஒரு மொழியின் வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாது. இந்நிலையில் இவற்றை ஒரு தாளில் எழுத முயற்சிப்பது வீண் அல்லவா?

சொன்னாப்போல, அன்பு என்ற வார்த்தையை மாத்திரம் நான் சொல்லவில்லை.

வெறுப்பும் அப்படியான ஒன்றுதான்.

போர் இன்னொன்று.

அடுத்தது இந்த நம்பிக்கை. ஆகா. ஆகா. நம்பிக்கை.

இப்போது தெரிகிறதா? இதனால்தான் நான் என் கதைகளைச் சொல்லவேயில்லை. ஒன்று, நீ வாழ்ந்து பார்த்திருந்தால், எந்த ஒரு வார்த்தை விவரிப்புகளாலும் அதனை நெருங்கக்கூட முடியாது என்பதை உணர்ந்திருப்பாய். இல்லை, நீ வாழ்ந்திருக்காவிட்டால் நான் எப்படி விவரித்தாலும் அது உனக்கு எக்காலத்திலும் விளங்கப்போவதில்லை.

இப்போது சொல்லு. எதற்காக நான் என் கதைகளைச் சொல்லவேண்டும்?

000

மெல்பேர்ன் வாசகர் வட்டத்தின் மாதாந்தச் சந்திப்பில் இம்முறை வாசிப்புப் பகிர்வுக்காகத் தமிழ்நதியின் ‘மாயக்குதிரை’ சிறுகதைத் தொகுப்பு தெரிவு செய்யப்பட்டிருந்தது. அந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ‘காத்திருப்பு’ என்ற கதை வாசகர்கள் மத்தியில் பெரு அலைக்கழிப்பையும் தொடர்ச்சியான உரையாடலையும் ஏற்படுத்தியிருந்தது.



‘காத்திருப்பு’ என்ற சிறுகதை ஈழத்துப் போரிலே காணாமலாக்கப்பட்ட இளைஞன் ஒருவனுடைய தாயின் இருபத்தைந்து வருடப் பரிதவிப்பைப் பற்றிப் பேசுகின்ற கதை. இதுதான் ஒற்றைவரி விவரிப்பு. ஒரு பெரும் ‘அந்தரிப்பு’ வாழ்க்கை ஒரு இருபத்தைந்து பக்கச் சிறுகதைக்குள் அடக்கப்பட்டு, பின்னர் அது இங்கே வெறுமனே ஒரு வரியில் சிறு விவரிப்பு ஆகுகின்ற, மின்கா சொல்லும் வார்த்தைகளின் அபத்தத்தையும் நாம் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இருபத்தைந்து வருடங்களாகக் காணமலாக்கப்பட்ட தன் மகனை ஒரு தாய் இன்னமுமே தேடிக்கொண்டிருக்கக்கூடுமா? ஊரே காலியான பின்னும் ஞானம்மா தன் மகன் கோகுலனுக்காகக் காத்திருக்கிறார். அவன் பாவித்த அறையை அப்படியே விட்டு வைத்திருக்கிறார். அவனுடைய பொருட்களுடன் இருப்பது என்பது அவனுடன் இருப்பதைப்போல இல்லைதான், ஆனாலும் ஏதோ ஓர் ஆசுவாசம் என்று நினைக்கிறார். காணாமலாக்கப்பட்டவர்களை மீளக்கொண்டுவருவதற்காகப் போராடும் ஆர்ப்பாட்டங்களுக்குத் தவறாது சென்று, ஒவ்வொரு சிறைச்சாலை வாசல்களிலும் போய்க் காத்திருந்து, பலரால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டபடியே ஒரு பெண்மணி எத்தனை காலம்தான் வாழக்கூடும்?

ஒரு பார்வை வெளிப்பட்டது. அந்தத் தாய்க்கு உள்ளூர தன் மகன் இனிமேல் வரப்போவதில்லை என்பது தெரிந்திருக்கலாம். ஆனால் அதை ஏற்றுக் கொள்வதால் என்ன ஆகப்போகிறது? அவன் வருவான் என்று நம்பிக்கையோடு இருக்கும்போது வாழ்வில் ஒரு பிடிப்பும் தேவையும் அமைகிறது. அதனால் அவர் அப்படித் தொடர்ந்து காத்திருந்திருக்கலாம். அந்தக் காத்திருப்பும் என்றாவது அவர் மகன் வருவான் என்கின்ற எதிர்ப்பார்ப்பும்தான் அவருடைய வாழ்வின் ஒரே கொழுகொம்பாக இருந்திருக்கவேண்டும். காத்திருப்பே அந்த மனிதரின் வாழ்வை அர்த்தப்படுத்துகிறது என்பதும் இதனையொத்த ஒரு சக பார்வையாக முன்வைக்கப்பட்டது.

இது இயல்பாக எல்லோருக்கும் ஏற்படக்கூடிய எண்ணப்போக்குத்தான். இல்லை என்று தெரியும், ஆனாலும் இன்னமும் தொடர்ந்து எதற்கு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்று பலரும் தமக்குள்ளே உரையாடிக் கேட்டிருக்கிறோம். எளிமையான, தர்க்கரீதியான சிந்தனைப்போக்கின் வெளிப்பாடு அது. ஆனால் இந்தப்போக்கு பாதிக்கப்பட்டவர்களிடமும் இருக்குமா என்றால், இல்லை என்பதே பொதுவான அனுபவமாக இருக்கிறது. இன்று கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்குமாய் எங்கெல்லாம் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றனவோ அங்கெல்லாம் பல பெற்றோர்களும் உறவினர்களும் அலைந்து திரிவதைக் காண்கிறோம். அரசியல்வாதிகளிடமும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமும் உள்ளூர் சட்டநிபுணர்களிடமும் தம் பிள்ளைகளை எப்படியாவது மீட்டுத்தாருங்கள் என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் போய் இறைஞ்சும் பல பெற்றோர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் இன்னமும் தம் பிள்ளைகள் உயிரோடு இருப்பதாகவே நம்புகிறார்கள். நம்பிக்கை. மின்கா குறிப்பிட்ட இன்னொரு வார்த்தை அல்லவா?

அவர்களின் அந்த நம்பிக்கை பிறருக்குப் பெரும் வியப்பையே அளிக்கக்கூடும். போர் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் அவர்கள் உயிரோடு இருக்கக்கூடுமோ என்று பலர் எண்ணிக்கொள்ளலாம். ‘காணாமற்போனவர் உயிரோடு இருக்கச் சாத்தியமில்லை’ என்று அப்போதைய இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு பொங்கல் விழாவில் சொன்னதும் கதையில் பதிவு செய்யப்படுகிறது. ஏனையவர்களுக்கு இது இன்னொரு பிரச்சனை மாத்திரமே. அவரவர் சோலி அவரவர்க்கு என்று கதையிலேயே ஒரு வாக்கியம் வரும். ‘இந்த உலகம் எவ்வளவு சந்தோசமாயிருக்கிறது’ என்று அந்தத் தாய் ஓரிடத்தில் வியந்துகொள்வார். இதுதான் நம்மைச் சூழவுள்ள உலகம். இதுதான் இயல்பு. இந்த ஒரு காரணத்தாலேயே உலகம் பாதிப்புற்றவருக்குப் புத்தி சொல்லும் தகுதியை இழக்கிறது. ‘உயிரோடு இருந்தால்?’ என்கின்ற சிறு புள்ளிதான் அந்தப் பெற்றோரின் நம்பிக்கைப் பிடிமானம். உங்கள் பிள்ளைகளை அந்த முகாமில் கண்டோம், இந்தச் சிறையில் இருக்கலாம் என்கின்ற கதைகளும் அடிக்கடி பரவுவதால் அந்த நம்பிக்கை எப்போதுமே அவர்களிடமிருந்து அகல்வதில்லை. மிக மிகச் சிக்கலான, மின்கா சொல்லுகின்ற அந்த வார்த்தைகளால் விவரிக்கமுடியாத உணர்வு இது.

இந்த ஒரு காரணத்தாலேயே இக்கதையை ஆராய்கின்ற பக்குவமோ தகுதியோ நமக்கில்லை என்றொரு எண்ணம் வெளிப்பட்டது. பொதுவாகவே ஒருவரின் பிரச்சனையையும் பாதிப்பையும் அதே அனுபவம் இல்லாத இன்னொருவரால் விளங்கிக்கொள்ள முடியாது. எல்லாவற்றையும் ஒருவிதத் தீர்வு மனநிலையில் பேசுவதே தவறு. போரின் அதி உச்ச வலிகளைப்பற்றி இவ்வாறு இருக்கலாம், ஏன் இப்படிச் செய்வதில்லை, இப்படி நடப்பின் வாழ்வில் முன்னேறலாமே என மற்றவர்களின் மனநிலையை ஊகித்து அவர்களுக்குத் தீர்வு கொடுப்பது எதுவுமே அர்த்தமற்ற செயற்பாடுகளாகவே அமையும். நாம் ஞானம்மாகவோ அபிராமியாகவோ ஏன் கோகுலனாகவோ இல்லாத பட்சத்தில் எமக்கு இது பற்றி எந்தக் கருத்தும் கூற முடியாது. வெறுமனே சம்பவங்களை வாசித்து உணர முயல்வதை மாத்திரமே செய்யமுடியும். இதுபற்றி ஆராய்ந்து என்ன கிழிக்கப் போகிறோம்? ஒரு வலியோடு அல்லாடுகின்றவர்களின் மனநிலை புரியாமல் புத்தி சொல்லும் முட்டாள்தனம் கொடுமையானது. இதற்குக் கதையிலேயே மற்றவர்கள் சொல்லும் கருத்துகளுக்குக் கோகுலனின் அம்மா வெளிப்படுத்துகின்ற உணர்வுகளே அவற்றுக்குச் சரியான பதிலாக அமையும். அனுதாபச் சோற்றை அவர் என்றைக்குமே விரும்பியதில்லை.

புத்தி சொல்லத் தகுதியில்லை. தேவையுமில்லை. ஆனால் ஆராய்வுகளில் தவறில்லை என்பது அதற்கான பதில் பார்வையாக வெளிப்பட்டது. உரையாடல்கள் நமக்கு ஒரு விழிப்பையும் முதிர்ச்சியையும் தருகிறது. தீர்வு மனநிலையோடு விசயங்களை அணுகாமல் புரிந்துகொள்ளும் மனநிலையை நோக்கி அவை நம்மைத் தள்ளுகின்றன. அந்த அம்மாவுடைய காத்திருப்பின் வலி கொடியது. அவர் அப்படிக் காத்திருக்கலாமா அல்லது வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கவேண்டுமா என்பது விவாதிக்கக்கூடிய விசயமே அல்ல. நாம் அதுபற்றிப் பேசவே முடியாது, ஏனெனில் வாழ்வில் அப்படியான ஒரு விசயத்தை நாங்கள் இழக்கவேயில்லை. இழப்பின் வலி இழந்தவர்கள் மட்டுமே அறியக்கூடியது.

கதையின் முடிவும் பலரைப் பாதித்திருந்தது. அவ்வளவு சோகத்தோடு, பதட்டத்தோடு ஆற்றாமையோடு வாசித்த கதையின் இறுதியில் மகன் உயிருடன் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு உடன் இருக்கும் வளர்ப்பு மகனுடன் வாழ்க்கையைத் தொடரும் தாயின் முடிவு கொஞ்சமேனும் ஆசுவாசப்படுத்தியது. அதை ஒரு மகிழ்ச்சியான முடிவாகக் கருத முடியாவிட்டாலும் ஓரளவுக்கு நிம்மதியைக் கொடுக்கும் முடிவாக இருந்தது. சிறிதேனும் நம்பிக்கையை அளித்தது. இங்கே மின்காவின் நம்பிக்கை என்ற வார்த்தை பிறிதொரு அர்த்தத்தை வேறொருவருக்குக் கொடுக்கிறதல்லவா? மகன் இருக்கிறானா, இல்லையா எனும் ஏக்கத்தை விட ஒரு காலகட்டத்தில் அலைக்கழிப்புகளே அந்தத் தாய்க்குக் கொடுமையாக மாறிப்போயின. அதன் வெளிப்பாடுதான் மரணச் செய்தியைக் கேட்டபிறகு அந்தத் தாயினுள் ஏற்பட்ட மாற்றமோ என்னவோ.

கதையில் காணாமலாக்கப்பட்ட கோகுலன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் திரும்பத் தாயிடம் வராமல் இயக்கத்துக்குப் போய்ச்சேர்ந்தது பற்றிப் பலதரப்பட்ட எண்ணங்கள் பகிரப்பட்டன. ஒருவன் கொடுஞ்சிறையிலிருந்து வெளியே வந்து, தனக்காகக் காத்திருக்கும் தாயிடமும் காதலியிடமும் செல்லாமல் நேரே இயக்கத்துக்குப் போகிறானென்றால் அவன் மனம் எத்தகு வெஞ்சினத்தையும் ஓர்மத்தையும் அடைந்திருக்கவேண்டும்? அவன் திரும்பித் தாயிடமே போயிருக்கலாம்தான். ஆனால் அப்படி அவன் போகவில்லை எனும்போது, அவனுடைய வயதுக்கு அவன் பெற்ற தாங்கொணாத அனுபவங்களை ஓரளவுக்கு ஊகிக்கமுடிகிறது. அவன் இயக்கத்தில் இணைந்துகொண்டதையும் ஏற்றுக்கொள்ளமுடிகிறது.

ஆனால் கோகுலன் இயக்கத்தில் இணைந்தமையானது கதையின் ஆதார செய்தியை நீர்த்துப்போகச் செய்கிறது என்பது இன்னொரு புள்ளியாக முன்வைக்கப்பட்டது. அவன் தன்னைக் கொடுமை செய்தவர்களை எதிர்த்துப் போராடி வீரச்சாவு அடைந்தான் என்பது ஒருவித ‘absurd poetic justice’ ஆக இருக்கக்கூடும். ஆனால் இன்றைக்குத் தினமும் தம் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காகப் போராடுபவர்களுக்கு இந்தத் திருப்பம் எவ்விதத்திலும் உதவி செய்யப்போவதில்லை. பல காணமலாக்கப்பட்டவர்கள் இலங்கை அரசாலே கொல்லப்பட்டவர்கள். எஞ்சிய சிலர் இன்னமும் தடுப்புக்காவலில் கொடும் வலியைத் தொடர்ந்து எதிர்கொண்டபடியே நாட்களைக் கழித்துக்கொண்டிருக்கலாம். இந்தக்கதையின் முடிவு அவர்களுடைய பிரச்சனைக்கு எதிர்மறையான விளைவையே ஏற்படுத்துகிறது. அவர்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்யும் ஞானம்மா போன்ற பெற்றோர்களுக்கு இக்கதை சொல்லவிளைவது என்ன? உங்கள் குடும்பத்தினர் சிறையில் இல்லை. அவர்கள் எப்போதோ விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். ஆனால் அவர்கள்தான் உங்களை வந்து பார்க்காமல் போரிடச்சென்று மாண்டுவிட்டார்கள் என்பதா? இது அபத்தம் இல்லையா? கதை தன்னையறியாமலேயே தான் சொல்ல முனைந்த கருத்துக்கு எதிரான திசையில் திரும்பிவிட்டதோ என்ற சந்தேகம் வருகிறது.

தமிழ்நதியின் ‘காத்திருப்பு’ சிறுகதையில் ஞானம்மா மாத்திரம் தன் மகனுக்காகக் காத்திருக்கவில்லை. அற்புதனும் காத்திருக்கிறான். அபிராமியும் காத்திருக்கிறாள். கணேசரத்தினம் மாஸ்டரும்தான். இவர்களோடு நாமும் சேர்ந்துகொள்கிறோம். ஒவ்வொருவருடைய காத்திருப்பும் வேறு வேறானது. அற்புதன் ஒரு கட்டத்தில் கோகுலன் திரும்பி வந்துவிடக்கூடாது என்றுகூட எண்ணத் தலைப்படுகிறான். அபிராமி திருமணம் முடிப்பது என்பது கோகுலனுக்கான காத்திருப்பின் இறுதிப்புள்ளியாகத்தான் ஞானம்மா பார்க்கிறார். எல்லாக் காத்திருப்புகளிலும் ஒரு சின்னதான சுயநலமும் இருக்கிறது. மனிதர்களின் இயல்பு அது. கோகுலன் இனிமேல் வரப்போவதில்லை, அவன் வீரச்சாவடைந்துவிட்டான் என்றதும் ஞானம்மாவில் ஏற்படும் மாற்றங்கள் அந்த இயல்பு கொடுக்கின்ற உச்சம் எனலாம்.

000



மீண்டும் மின்காவிடம் வரலாம். இது மூல நாவலில் இல்லாதது. ஆனால் தமிழ்நதியின் சிறுகதையைப் பற்றி உரையாடிய பின்னர் மின்காவும் பேத்தியும் இப்படியும் பேசியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

மின்கா பேத்தியிடம் கேட்கிறார்.

“இப்போது சொல்லு. எதற்காக நான் என் கதைகளைச் சொல்லவேண்டும்? யாருக்குச் சொல்லவேண்டும்? யார் அவற்றை முழுமையாகப் புரிந்துகொள்ளப்போகிறார்கள்?”

“இல்லை, யாருமே முழுமையாகப் புரிந்துகொள்ளப்போவதில்லை. நிச்சயமாக இல்லை. ஆனால் எல்லோருக்கும் ஏதோ ஒன்றேனும் புரியலாம். உங்கள் நண்பி கொல்லப்பட்டக் கணத்தில் உங்களிடம் தோன்றியது அச்சமா, கவலையா, கோபமா, வன்மமா என்ற சந்தேகங்கள் எழலாம். ஒரு சின்னக் கல்லு நகர்த்தப்படலாம். பிறிதொருமுறை எங்கோ ஒரு நிலத்தில் யாரோ மனிதர்மீது இத்தகு துன்பம் நிகழும்போது சிறு கண்ணீர்த்துளி விழலாம். சின்னதாக, அனிச்சையாக ஒரு அருட்டல் நிகழ்ந்தால்கூட அது மனிதத்தை நுண் மணலளவேனும் முன்னே நகர்த்தலாம் அல்லவா? அந்தச் சந்தர்ப்பத்தையே நீங்கள் உங்கள் கதைகள்மூலம் கொடுக்கிறீர்கள். ”

ஞானம்மா எதுவுமே பேசாமல் யோசனையோடு பாய்க்கட்டிலில் கிடக்கிறார். பேத்தி தொடர்கிறாள்.

“அன்பினை ஆயிரம் வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தங்களில் வெளிப்படுத்தினாலும் என்ன குடியா மூழ்கப்போகிறது? அன்புதானே பாட்டி?”

இந்த ஒரு கணத்தில் மின்காவின் கட்டிலில் ஞானம்மா புரண்டு படுப்பதும் அருகில் இருந்து கதை பேசுவது அற்புதனின் செல்ல மகள்போன்றும் தெரிவது நமக்கு மட்டும்தானா?

000

மெல்பேர்ன் வாசகர் வட்டம்
ஏப்ரல் 2021 சந்திப்பு

கருத்துகள்