அமெரிக்க எழுத்தாளர் ஜோடி பிக்கோவின் ‘The Story Teller’ என்ற நாவலில் மின்கா என்கின்ற ஒரு மூதாட்டியின் பாத்திரம் வருகிறது. மின்காவும் அவள் நண்பியான தரீஜாவும் தம்முடைய பதின்மங்களில் ஓஸ்விச் வதை முகாமில் நாசிக்களினால் அடைக்கப்படுகிறார்கள். முகாம் வாழ்க்கையில் மின்கா கதைகளை எழுத ஆரம்பிக்கிறாள். அக்கதைகள் அவளுக்கு மாத்திரமின்றி அந்த முகாமில் சிறைபிடிக்கப்பட்டிருந்த பலருக்குமே வடிகாலாக அமைந்துபோயின. ஆரம்பத்தில் அவள் கதைகளில் ஈர்க்கப்பட்ட ஒரு நாசிக் காவலன் மின்காவுக்கு போர்வையும் உணவும் கொடுக்க ஆரம்பிக்கிறான். ஆனால் ஈற்றில் அந்தத் தொடர்பே மின்காவின் நண்பி தரீஜாவின் மரணத்துக்கும் காரணமாகிவிடுகிறது. மின்காவும் கொலைக்களத்துக்கு அனுப்பப்பட்டாலும் இறுதிக்கணத்தில் எப்படியோ தப்பியோடி ஒரு வழியாக அமெரிக்காவைச் சென்றடைகிறாள்.
இரண்டாண்டுகளை எட்டிவிட்ட எங்கள் வாசகர் வட்டத்தின் கொண்டாட்டம்.
"அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு. விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை" என்றான் பாரதிதாசன். வாசிப்பு அதனை செய்கிறது. ஒரு பள்ளியோ, குடும்பமோ முழுவதுமாக கொடுத்திட முடியாத அந்த அனுபவத்தை வாழ்க்கையும் வாசிப்பும் தருகின்றது.
இந்த மாதம் எங்கள் கைகளில் தவழ்ந்த புத்தகம் சுந்தர ராமசாமி அவர்களின் "ஒரு புளியமரத்தின் கதை".
முதல் பதிப்பை 50 ஆண்டுகளுக்கு முன்னர் வாசிக்கும் வாய்ப்பு பெற்ற மூத்த எழுத்தாளர் திரு.முருகபூபதி அய்யா, தனது நினைவில் மாறாது நின்ற சில காட்சிகளை பகிர்ந்துகொண்டார். அவரைத் தொடர்ந்து மற்ற வாசகர்களும் தத்தம் கருத்துகளை எடுத்துரைத்தோம்.
ஒரு நாவல் 50 சொச்சம் ஆண்டுகளைத் தாண்டியும் உயிரோட்டத்தோடு இருப்பது எளிதல்ல. மூன்று கால கட்டங்களில், அதாவது பிரபுத்துவம், காலனிய ஆட்சி மற்றும் ஜனநாயக ஆட்சி முறைகளைத் தாண்டி நிற்கும் அந்த புளிய மரம் ஒரு வரலாற்று சான்றாகவே திகழ்ந்திருக்கிறது. அத்தனை மாட்சிமையோடு இருந்த அந்த விருட்சம், தனி மனிதனின் வக்கிரங்களினால் தூண்டப்பட்டு, இரு வியாபாரிகளிடையே ஏற்படும் போட்டி மற்றும் பொறாமையினால் சிதைக்கப்படுகிறது. மனிதர்கள் ஆதாயத்திற்காக எதையும் எவரையும் அழிக்கக் கூடியவர்கள். அவர்களது ஆக்கங்கள் அழிவின் எச்சங்களென்பது தான் இந்த நாவல் உணர்த்திச் செல்லும் பாடம்.
ஒரு நாவலுக்குள் பல நாவலுக்கான சாரம் இருப்பது தான் சிறப்பம்சம் என்று தோன்றுகிறது. சாமானியர்களின் உலகை புடம் போடுகிறது. முதல் பாதியை தாமோதர ஆசானும் இரண்டாம் பாதியை இசக்கியும் கொண்டுசெல்கிறார்கள். அன்று முதல் இன்றுவரை ஒரு பத்திரிகையாளனின் பேனா மோசமான மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமைகொண்டது என்பதை முகத்தில் அரைந்தாற்போல் சொல்லிச்செல்கிறது.
காற்றாடி மாந்தோப்பு பூங்காவாக புதுப்பொலிவை அடைந்து "மாற்றம் மாறாதது" என்று சொல்லாமல் சொல்லிப்போகிறது. இப்படியான நவீன மாற்றங்கள் இயற்கையை அழித்துவிட்டுத் தான் நிகழவேண்டியுள்ளது என்று ஒரு சிலர் மட்டுமே எப்பொழுதும் அங்கலாய்க்கிறார்கள். இயற்கை மனிதனின் அகங்காரத்திற்கு முன் சக்தியற்று வீழ்கிறது.
நாவல் நெடுக சமூகத்தில் நிகழும் மாற்றங்களையும், மக்களின் மனநிலையையும் பல கேள்விகளோடும், பதில்களோடும், குமரி மாவட்டத்திற்கே உரிய அந்த மொழிநடையோடு நகைச்சுவை உணர்வு ஓங்க சொல்லப்பட்டுள்ளது. மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் ஹிப்ரு(முதல் தமிழ் புத்தகம்) மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இந்த புத்தகம்.
செவிக்கு உணவும் பின் சிறிது வயிற்றிற்கும் உண்டு, அடுத்த மாதத்திற்கான புத்தகத்தையும் மனம் நிறைய கருத்துகளையும் ஏந்தியவண்ணம் விடைபெற்றோம்.
இந்த வாசகர் வட்டத்தை வித்திட்டு வழிநடத்தும் எழுத்தாளர் திரு முத்துகிருஷ்ணன் அவர்களுக்கும், அதை சோர்வின்றி செவ்வனே செய்து வரும் தோழி சாந்தி சிவகுமாருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
-- விஜி ராம்
கருத்துகள்
கருத்துரையிடுக